Monday, September 8, 2014

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்

மூலம்: Organic Farmers Market

1. இரசாயனங்களை நம் உடலிலிருந்து விலக்க வேண்டும்: 
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், நச்சுக்கள் அடங்கிய இரசாயனங்களால் ஆனது. இத்தகைய நச்சுக்கள் விளைபொருட்களிலும் தங்கி விடுகின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான உணவு வகைகள் நச்சுத்தன்மை கொண்டுள்ளன. இவை உணவுப் பொருட்களைக் கழுவுவதின் மூலம் நீங்குவதில்லை. மாறாக அவை மிகக் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வறிக்கைகள், பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் ஆபத்துக்களாக, புற்றுநோய், நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு, மலட்டுத்தன்மை, போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றன. 

2. வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும்:
பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மையானது, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டத் துவங்குதற்கு முன்னரே, பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயத்தைக் கொண்டுள்ளது. குழந்தைத் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் உணவானது, எந்த விதமான நச்சுக்களும், இரசாயனங்களும் இல்லாதிருக்கின்றது. எனவே அவை வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும், மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் உடல் உறுப்புகள் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது.

3. ஹார்மோன், நோய் எதிர்ப்பு ஊசிகள் மற்றும் மருந்துகளை கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: 
கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, வளர்ச்சியை அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் ஊசிகள் போடப்படுகிறது. இந்த மருந்துகளின் தாக்கம் பாலிலும், இறைச்சியிலும் கலந்து, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.


4. சிறந்த ஊட்டச்சத்து மற்றும் சிறந்த சுவையைப் பெறவேண்டும்:
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், இரசாயன முறை விளைபொருட்களைக் காட்டிலும், அதிகளவு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளன. மேலும் இயற்கை விளைபொருட்கள் எப்பொழுதும் சுவை மிகுந்ததாக உள்ளது.

5. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும்: 
இரசாயன முறை விவசாயம் சுற்றுப்புறத்திற்கு கேடுவிளைவிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலத்தடி நீரில் கலப்பதால், நீர்வாழ் உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் அழிவை உண்டாக்குகிறது. தற்போதைய விவசாயம் இரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதால், மண்ணில் இயற்கையான வளம் அழிந்து விட்டது.

6. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: 
இயற்கை முறை விவசாயம், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்காக, மற்றவர்களை சார்ந்திருப்பதை தடுக்கிறது. மாறாக விவசாயிகள் தமக்குத் தேவையானவற்றை மாட்டுச்சாணம், பயன் தரும் மூலிகைகள் மற்றும் இலைகளிலிருந்து தயாரித்துக் கொள்ள முடிகிறது. இதை விடுத்து மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை என்பது, அதிகப்படியான பொருளாதார விரயத்தை ஏற்படுத்தி, விவசாயிகளை மனம் உடைந்து போகச் செய்கிறது.

7. விவசாயிகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும்:
இந்திய விவசாயிகள், வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஏராளமான பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து இரசாயன நச்சுக்களை உபயோகிப்பதால், விவசாயிகளும் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், இன்ன பிற ஆபத்தான நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகளை சுயமாக அனுபவித்த பல விவசாயிகள், இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

8. பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க வேண்டும்:
இந்திய விவசாயிகள் உருவாக்கியுள்ள விதைகள் அனைத்தும் இயற்கையிலேயே பூச்சிக்களின் தாக்குதலை சமாளிக்கும் தன்மை கொண்டவை. மேலும் அவை மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியதாகவும், உள்ளூர் தட்பவெப்பத்திற்கேற்ப வளரும் தன்மையுடையதாகவும் உள்ளது. வேதியுரங்களைக் கொண்டு செய்யப்படும் விவசாயத்தில், கலப்பினம் செய்யப்பட்ட, இந்திய மரபில்லாத விதைகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

9. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்: 
இயற்கை வழி விவசாயத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு வேளை இந்திய உணவுச் சந்தையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டு விட்டால், அவற்றை இயற்கை வழி விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து நம்மால் வேறுபடுத்திக் காண இயலாது. இதைத் தடுக்க, இயற்கை வழி விவசாயத்தைச் சார்ந்திருப்பதே சிறந்த வழியாகும்.

10. பல்லுயிரியம் பாதுகாக்க வேண்டும்:
நீங்கள் இயற்கை முறை விவசாயம் நடைபெறும் வயல்களில் நடந்து சென்றிருந்தால், பலவகையான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் நடமாட்டத்தைப் பார்த்திருக்க முடியும். இயற்கை முறை விவசாயத்தில் முதல் அறுவடைக்குப் பிறகு, பல்லுயிர்ப் பெருக்கம் தானாகவே நிகழ்கிறது.

No comments :

Post a Comment