Friday, January 2, 2015

இயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்

இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

நோய் என்றால் என்ன?
மனிதனின் இயல்பு ஆரோக்கியம். அது தாழும் போது, அதை உயர்த்த நிகழும் உள்ளுறை ஆற்றலின் பணியே நோய்.
உடல் நலத்தைப் பேணுவதும் அது தாழும் போது, அதை உயர்த்துவதும் உள்ளுறைகின்ற உயிராற்றலே ஆகும். அவை வேறுபட்டவை அல்ல. இருநிலைகளும் ஒன்றே.
நமக்கு அவ்வப்போது உடல் நலம் குறையக் காரணம், நோயைப் பற்றிய நமது தவறான அறிவே தவிர, வேறெதுவுமில்லை. நம்மில் பெரும்பாலோர் உடல் நலத்தைப் பற்றி தவறாக அறிந்து உள்ளோம். அநேகர் அரைகுறையாக அறிந்திருக்கின்றோம். மெத்தப்படித்தவர் என்று சொல்லப்படுகின்றவர்களிடையேயும் உடல் நலம், நோய் என்பனவற்றைப் பற்றிய அறியாமை காணப்படுகிறது. இத்தகைய தெளிவில்லாத தவறான தேற்றங்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி உயர்ந்த உன்னதமான உடல் நலம் பெற்று வாழ வகையின்றி செய்கிறது.

மருத்துவம் மற்றும் மருத்துவரின் கடமை என்ன?
மருத்துவம் என்பது வருமுன் காப்பது. அதுவே இந்நாளில் எங்கும் பேசப்படும் உண்மை. மக்களின் நல் உடல் நலம் காத்து ஊதியம் பெறுவோரே மருத்துவராவர். நோய் வளரும் வரை காத்திருந்து அத்தோடு போராடி ஊதியம் பெறுபவர் அல்லர். 

இந்நாட்களில் மருத்துவ உலகில் நோயாளிகளுக்காகக் காத்திருந்து அவர்கள் தங்களிடம் வரும் போது சிகிச்சை என்ற பெயரில் நோயை அடக்கி உடல் நலமென்னும் மாயையைத் தோற்றுவித்து பணம் பெறுகின்றனர். இவ்வாறு, பணம் பண்ணுவது, நோய்ப் பண்ணையாக சமூகம் சீர்கேடான அவல நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்நிலை மாறி மக்கள் நல்லுடல் நலத்தோடு வாழ வேண்டுமென்ற விழிப்புணர்வு தோன்ற வேண்டும். 

ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறை என்ன?
இயற்கை வாழ்வியலில் கற்கும் பாடங்கள் நோய் மற்றும் உடல் நலத்தைப் பற்றிய தெளிவையும் விழிப்புணர்வையும் அளிக்கின்றன. இத்தகு தெளிவான அறிவு, உடல் நலம் தாழ்ந்தவர்கள் அதிலிருந்து மீண்டு எளிதில் உயரவும், உடல் நலத்தோடு இருப்பவர்கள் மேலும் தொடர்ந்து உன்னத உடல் நலத்தோடு வாழவும் வழி வகுக்கிறது.

மெய்ஞானத்தை அடியொற்றி இயங்கும் இயற்கை வாழ்வியல், மக்களின் உடல் நலத்தைப் பேணியே, மருத்துவர்கள் ஊதியம் பெற வேண்டுமென்ற உண்மையை ஆணித்தரமாக மக்களுக்கு உணர்த்துகிறது. 

இயற்கை வாழ்வியலானது, உடல் நல உயர்விற்கான மாறுபாடில்லா உண்டி, யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் நலத்தை இயல்பாக உயர்த்தும் நல் மார்க்கங்களை மக்களுக்குப் போதிக்கின்றது.
இயற்கை வாழ்வியல் துறையில் வல்லுநர்கள் மக்களின் உடல் நலத்தைப் பேணுவதற்காக ஊதியம் பெறுவோர். அங்ஙனம் மக்கள் உடல் நலத்தால் தாழ்ச்சியுறும் போது உடலுக்குப் பின் விளைவுகள் ஏதுமில்லா இயற்கையான வழியான உடல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் வகையான எளிய நல் உபாயங்களைக் கையாண்டு உடல் நலத்தை உயர்த்தி ஊதியம் பெறுவோர்.

இயற்கை வாழ்வியலென்ற ஒரு துறையை செவ்வனே புரிந்து கொண்டு கடைபிடிக்கும் போது, அத்துறையே உடல் நல உயர்வுக்கான நற்பாதுகாவலனாக இயங்குகிறது.

இத்துறை மக்களிடையே 'உனக்கு நீயே மருத்துவர்' என்ற சீரிய விழிப்புணர்வைத் தூண்டி அவர்களை நல்வழிப்படுத்துகிறது. மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், நோய் வாய்ப்பட்டால் செலவின்றி, மருந்தின்றி வீட்டிலேயே தனக்குத்தானே மருத்துவராகி சுகமடையும் வழியை அறிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment