இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல்
இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள்
என நினைத்திருக்கலாம். சித்த மருத்துவர் திரு.சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய
ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது.
அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு
முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள்
அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது.
பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு,
வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து
விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை
பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக
மறந்து விட்டனர்.
ஒரு முக்கியமான
விசயத்தை, நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். உலகம் முழுவதிலும் வெவ்வேறு வகையான
சிறுதானியங்கள் விளைகின்றன. எனவே உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.