- கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
- வெங்காயம் – 1/4 குவளை
- துருவிய தேங்காய் - 1/4 குவளை
- மிளகு – 6
- கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டிகள்
- கறிவேப்பிலை - 2 தேக்கரண்டிகள்
- இந்துப்பு – 1/4 தேக்கரண்டி
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டிகள்
- வெங்காயம், கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். மிளகைப் பொடித்துக் கொள்ளவும். இவை தயாரானதும், ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி மட்டும் எண்ணை ஊற்றி சூடாக்கவும். அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் மீதமுள்ள மிளகுப் பொடி, நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். சற்று நேரம் ஆற விடவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில், கம்பு மாவை போட்டு, அதனுடன் இந்துப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணை சேர்க்கவும். ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பொருட்களை மாவில் போட்டு கலந்து கொள்ளவும். தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை ஒன்று சேர்த்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகி விட்டால், இன்னும் சிறிதளவு மாவை கலந்து பிசைந்து கொள்ளலாம்.
- ஒரு தடிமனான பாலித்தீன் கவரை (மடிக்கும் படி இருக்க வேண்டும்) எடுத்து, அதில் உள்ளே இருபக்கங்களிலும் சில சொட்டுகள் எண்ணை தடவிக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிது மாவை எடுத்துக் கொள்ளவும். அதை உள்ளங்கைகளில் வைத்து நன்றாக உருட்டி, பின்னர் சற்று தட்டையாக அழுத்திக் கொள்ளவும். அதனை பாலித்தீன் கவரில் வைத்து மூடி, மேற்புறத்தில் சப்பாத்தி கட்டையால் மென்மையாக வட்டவடிவில் உருட்டவும். அதனை மிகவும் கவனமாக கவரிலிருந்து அகற்றி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கங்களும் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். தேவைப்பட்டால் மட்டும் தோசைக்கல்லில் சில துளிகள் எண்ணை ஊற்றவும்.
குறிப்பு:
- நான் இந்த உணவு செய்முறையை Healthy Food Kitchen எனும் காணொளியில் இருந்து கற்றுக் கொண்டேன். சிறுதானிய மாவை (சிலர் கோதுமை மாவு சேர்க்கின்றனர்) மட்டும் வைத்து, அதிக எண்ணை இல்லாமல் ரொட்டி செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். ஆனால் அப்படி செய்யும் பொழுது மாவை சரியான பக்குவத்தில் தயாரிக்கவில்லை என்றால் ரொட்டியை உருட்டும் பொழுதும், தோசைக்கல்லில் வேகவைக்கும் பொழுதும் மிக எளிதில் உடைந்து விடும். அவ்வகையில் இந்த செய்முறை மிக எளிதாக உள்ளது. ரொட்டியை சுட்டு எடுக்கவும் எண்ணை தேவைப்படவில்லை.
- ரொட்டியை ஆறிய பிறகு சாப்பிட்டால், சிறுசிறு துண்டுகளாக உடைந்தது போல் வரும். எனவே அது சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது.
- இதற்கு தொட்டுக் கொள்ள, உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னி அல்லது காய்கறி குருமா வைத்துக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment