Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Monday, October 28, 2013

இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்

இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளை வாசிக்கும் முன்னர், தயவு செய்து முன்னுரை மற்றும் இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? ஆகிய இரண்டு பதிவுகளையும் படித்து விட்டு இந்தக் கட்டுரையைத் தொடரவும். ஏனெனில் இயற்கை வாழ்வியலின் அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல், வெறும் உணவு முறைகளை மட்டும் வாசித்து விட்டு, அதை பின்பற்ற முயற்சித்தால், அடுத்த சில நாட்களில் உங்களுக்கு பலவிதமான மனக்குழப்பங்கள் ஏற்படலாம். ஏன், எதற்கு என்கின்ற காரணத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, இந்த வாழ்வியலை சந்தேகமின்றி கடைபிடிக்க முடியும்.

இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகள் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவராலும் கடைபிடிக்கக் கூடியவை. 

காலை 5 முதல் 5.30 மணிக்குள் - முதல் பானம்: 
நெல்லிக்காய் சாறு
வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் போதுமானது.

காலை 7 முதல் 7.30 மணிக்குள் - இரண்டாவது பானம்:
மருத்துவ குணமுள்ள சாறுகள்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாறுகளில் ஏதாவது ஒன்று தினமும் மாற்றி மாற்றி குடிக்கலாம்.
1. வில்வ இலை சாறு
2. அருகம்புல் சாறு
3. புதினா அல்லது கறி வேப்பிலை சாறு
4. வெண்பூசணி & வாழைத்தண்டு சாறு
5. எலுமிச்சை சாறு

குறிப்பு:
காலையில் நேரம் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடித்து 2 மணிநேரத்திற்கு பின் இரண்டாவது சாறு குடிக்கலாம். அதன் பிறகு ஒன்றரை மணி நேர இடைவெளியில் காலை உணவு உண்ணலாம். அவ்வாறு நேரம் இல்லையெனில் ஏதாவது 1 வகை சாறு மட்டும் குடித்து விட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். வில்வ இலை சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது.

காலை 9 மணிக்கு - பச்சைக் காய்கறி கலவை அல்லது பழங்கள்:
இதில் முழுமையான பச்சைக் காய்கறிகளை மட்டும் வைத்து செய்த கலவை அல்லது முழுமையான பழ வகைகள், இந்த இரண்டில் ஏதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடலாம். புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் சிறிது நாட்களுக்கு காலையில் பழங்கள் மட்டும் உண்ணலாம். பின்னர் சிறிது நாட்கள் காய்கறி கலவை மற்றும் பழ வகைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு பழகவும். அதன் பின்னர் காய்கறி கலவை மட்டும் தொடர்ந்து காலை உணவில் சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக காலை உணவில் சமைத்த உணவு கூடாது.

(A) பச்சைக் காய்கறி கலவை: 
எதற்கும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காய்கறிகளில் ஆறு சுவைகளும் உள்ளன.

1.கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை
2.சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் கலவை
3.காலி ஃப்ளவர் & குடைமிளகாய் கலவை
4.புடலங்காய் கலவை

(B) பழவகைகள்:
புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் முதல் 1 அல்லது 2 வாரங்கள் காலை உணவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது. அதன் பின்னர் காய்கறி சாலட் சாப்பிடத் தொடங்கலாம்.
பழங்களில் sweet, sub acid மற்றும் acid என்று மூன்று வகைகள் உண்டு.  எனவே இரண்டு விதமான பழங்கள் சாப்பிட விரும்புபவர்கள், ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். இது குறித்த அதிக தகவல்களுக்கு www.acidalkalinediet.net தளத்தில் உள்ள food combination chartஐப் பார்க்கவும். முடிந்த வரை அந்தந்த பருவ காலத்தில் அந்தந்த பகுதிகளில் விளையக் கூடிய பழங்களை சாப்பிடுவது உத்தமம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை தவிர்க்கவும்.
ஏதாவது 1 வகையான பழம் மட்டும் உண்பது மிகவும் சிறந்தது. உதாரணம்-> பப்பாளி / வாழைப்பழம் / கொய்யா / மாதுளை / ஆரஞ்சு / மாம்பழம் / சப்போட்டா. இல்லையெனில் 2 வகையான பழங்கள் மட்டும் சாப்பிடலாம். உதாரணம்-> பப்பாளி+வாழைப்பழம் / பப்பாளி+மாம்பழம் / மாம்பழம்+சப்போட்டா / ஆரஞ்சு+எலுமிச்சை.

காலை 11 மணிக்கு - கீர் அல்லது சூப் வகைகள்:
11 மணிக்கு பசித்தால் மட்டும் ஏதாவது கீர் வகை அல்லது கீரை சூப் அல்லது சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

(A) சூப் வகைகள்:
எல்லா வித காய்கறிகளிலும் சூப் செய்யலாம். 
உதாரணம்:
காய் -> பூசணிக்காய், புடலங்காய், சௌசௌ
கீரை -> சிறு கீரை அல்லது பாலக்

(B) கீர் வகைகள்:
கறிவேப்பிலை, மணத்தக்காளி, புதினா, வல்லாரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி (மஞ்சள் / பச்சை) அல்லது கேரட் இவற்றில் ஏதாவது ஒன்றை கீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.

மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் - சாத்வீக உணவு:
மதியம் சாத்வீகமாக சமைத்த உணவு (square meal) உண்ணலாம். சாத்வீக உணவில் எண்ணை மற்றும் புளி சேர்க்கக் கூடாது. சாதாரண உப்பிற்கு பதில் இந்துப்பு (பாறை உப்பு அல்லது rock salt) பயன்படுத்தவும். காரம் குறைவாக சேர்க்கவும். சாம்பாரில் துவரம் பருப்பு குறைவாகவும் காய்கறி அதிகமாகவும் இருக்க வேண்டும்.

  1. சாதம் - 1 குவளை (அல்லது) ரொட்டி - 2 முதல் 3 ரொட்டிகள் (அல்லது) சாத்வீக இட்லி - 3 முதல் 4 இட்லிகள்
  2. சாம்பார் - 1 குவளை
  3. கீரைக்கூட்டு - 1 குவளை
  4. காய்கறி பொரியல் - 1 குவளை

குறிப்பு:

  1. சாதம் செய்ய, கைக்குத்தல் அரிசி அல்லது பட்டை தீட்டப்படாத சிறுதானிய வகைகளான, வரகு, சாமை, குதிரைவாலி, திணை மற்றும் பனிவரகு, இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும். இவற்றை சாத்வீக இட்லி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
  2. ரொட்டி செய்ய, கோதுமை, ராகி, கம்பு மற்றும் சோளம், இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.



மாலை 5 மணிக்கு - தேநீர் அல்லது பானம்:
கீழே தரப்பட்டுள்ள பான வகைகளில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்.

1. சுக்கு மல்லி பானம்
2. ஆரஞ்சு பானம்
3. பச்சை தேநீர்

இரவு 7.30 – 8.00 மணிக்குள் - பழங்கள்:
இரவு உணவில் பழங்கள் மட்டும் உண்ண வேண்டும். சமைத்த உணவு கூடாது. பழவகை உணவு முறைகளில் குறிப்பிட்டுள்ளதைக் கடைபிடிக்கவும். இனிப்பு வகை பழங்கள் உண்ணும் பொழுது விருப்பப்பட்டால் சிறிது தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். உலர்ந்த பழங்கள் அல்லது பருப்பு வகைகளையும் இரவு உணவாக உட்கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒரு வகை பழம் அல்லது பருப்பு வகை சாப்பிடுவது (mono diet) சிறந்தது.



உணவு உட்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
  • நமது உடல் இறைவன் வாழும் இல்லம். எனவே கடவுளுக்கு பிரசாதம் படைப்பதைப் போல நாமும் உண்ணும் பொழுது தரையில் ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து உண்ண வேண்டும். அதே போல் முக்கியமாக நமது கவனம் முழுவதையும் உண்ணும் உணவின் மீது மட்டும் செலுத்தி ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். மற்றவர்களிடம் பேசிக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, மற்ற எந்தப் பிரச்சினைகள் குறித்த மனக்கவலைகளுடனோ சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • பச்சை காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள், சாறு, பான வகைகள் மற்றும் நீர் போன்ற எந்த உணவானாலும் “நீரை உண், உணவைக் குடி” என்ற மகா வாக்கியத்திற்கு ஏற்ப வாயில் உமிழ் நீர் சேரும் படி நன்றாக அரைத்துக் கூழாக்கி விழுங்க வேண்டும். உணவை பற்களினால் நன்றாக அரைத்து உண்ணுதலே பற்களுக்கான சிறந்த யோகாசனம் ஆகும்.
  • திட உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் நீர் அருந்துவதைத் தவிர்க்கவும். எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது மட்டும் தண்ணீர் குடித்தால் போதும்.
  • முடிந்த வரை இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் பலசரக்குப் பொருட்கள் உபயோகிப்பது நம் உடலுக்கும் பூமிக்கும் நல்லது. அவ்வாறு இயற்கை விவசாயப் பொருட்கள் கிடைக்கப் பெறாதவர்கள், மாதம் ஒரு முறை வில்வ இலை சாறு குடிப்பதன் மூலம் உடலில் சேரும் இரசாயன நச்சுக்களை வெளியேற்றலாம்.
  • கடையில் கிடைக்கும் carbonated drinks, processed and packed food (biscuits, chips, health drink mix, etc) இவற்றை அறவே தவிக்கவும்.
  • முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஐந்து வெள்ளை நிறமுடைய பொருட்கள் – அரிசி, பால் மற்றும் அனைத்து விதமான பால் பொருட்கள் (தவிர்க்க காரணங்கள்), ஐஸ்கிரீம், வெள்ளை சர்க்கரை மற்றும் உப்பு. இவற்றில் உப்பை சமைத்த உணவில் தவிர்க்க முடியாமல் போனால் சாதாரண அயோடைஸ்டு உப்பிற்கு பதில் இந்துப்பு பயன்படுத்துதல் நல்லது.
  • இயற்கை வாழ்வியல் முறை, தாவரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் உணவுகளை மட்டும் உண்பதற்கே அறிவுறுத்துகிறது. ஒருவேளை, புலால் உணவைத் தவிர்க்க இயலாமல் உள்ளவர்கள், அவ்வகையான உணவுகளை உண்ணும் பொழுது, கார்போஹைட்ரேட் இருக்கும் (சாதம், ரொட்டி போன்றவை) உணவுகளைக் குறைத்து அல்லது முற்றிலும் தவிர்த்து விட்டு, புலால் மட்டும் சாப்பிடுதல் நல்லது. எப்போதும் mono-diet எனும் வாக்கியத்தை நினைவில் கொள்ளவும்.
  • இரவு உணவு உண்ட பின் குறைந்தது 1 முதல் 2 மணி நேரம் கழித்து உறங்கச் செல்ல வேண்டும்.

No comments :

Post a Comment