Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Monday, September 4, 2017

குதிரைவாலி அடை தோசை

குதிரைவாலி அடை தோசை
குதிரைவாலி அடை தோசை
தேவையான பொருட்கள்: (8 முதல் 9 எண்ணிக்கை)
மாவு தயாரிக்க:

  1. குதிரைவாலி -  1 குவளை (200 கிராம்)
  2. சுண்டல் / கொண்டைக்கடலை – 1/4  குவளை (50 கிராம்)
  3. பெருங்காயம் – 1 சிட்டிகை
  4. மிளகு – 12 to 15 எண்ணிக்கை

மாவில் சேர்க்க:

  1. கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
  2. கொத்தமல்லி – 2 கொத்து
  3. சிறிய / பெரிய வெங்காயம் – 1/4 குவளை
  4. இந்துப்பு - சுவைக்கேற்ப


செய்முறை:
  1. கொண்டைக்கடலையை ஒருநாள் முழுதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் நன்கு அலசி விட்டு, ஒரு துணியில் போட்டு சுற்றி வைக்கவும். ஒருவேளை துணி காய்ந்துவிட்டாலோ அல்லது பயறு சற்று மணம் மாறினாலோ, பயறை ஒருசில முறை நீரில் அலசி விட்டு மீண்டும் துணியில் சுற்றி வைக்கவும்.  மூன்றாம் நாள் காலையில் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.
  2. குதிரைவாலி அரிசியை அடை செய்வதற்கு இரண்டு மணிநேரம் முன்பாக ஊற வைக்கவும். பின்னர் அதை நீரில் ஓரிரு முறை அலசி விட்டு, மிக்ஸியில் போடவும். அதனுடன் முளைகட்டியக் கொண்டைக்கடலை, பெருங்காயம் மற்றும் மிளகு போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.
  3. அரைத்த மாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிய அல்லது பெரிய வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும். மாவு சற்று நீராக இருக்க வேண்டும். எனவேத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
  4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அது சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னி அல்லது காய்கறி குருமா / அவியல் தொட்டு சாப்பிடவும்.
குறிப்பு:
  • சிறுதானியத்துடன் பாசிப்பயறை சேர்த்து அரைத்து செய்யும் சிறுதானியப் பெசரட்டு செய்முறையை, நான் நல்ல உணவு அமைப்பு நடத்திய சிறுதானிய சமையல் வகுப்பில் கற்றுள்ளேன். பெசரட்டு என்பது ஆந்திர மாநிலத்தில் முழுக்க முழுக்க பாசிப்பயறை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் தோசையாகும்.  அது போலவே தமிழ்நாட்டில் அரிசியுடன் சிலவகைப் பருப்புகள் சேர்த்து அடை செய்வதுண்டு. இந்த இரண்டு செய்முறைகளிலும் இருந்து இயற்கை வாழ்வியல் கருத்துக்களுக்கு ஏற்றவாறு, ஒரு புதிய முயற்சியாக இந்த குதிரைவாலி அடை தோசையை செய்து பார்த்திருக்கின்றேன். இது நன்றாகவே வந்துள்ளது.
  • அடை தோசை செய்ய விரும்பினால், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கொண்டைக்கடலையை ஊறவைக்க வேண்டும். அடை தோசை செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு வகையான பயறையும் முளைகட்ட வைத்துப் பயன்படுத்தலாம். நாம் வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி, முளைகட்டுவதற்கு ஆகும் நேரம் ஒவ்வொரு பயறுக்கும் மாறுபடும். ஒவ்வொரு பயறையும் தனித்தனியாக ஊறவைத்துப் பார்த்து நீங்களே அதைக் கண்டறிந்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு நேரத்தில் அடை தோசை செய்வதற்கு, இயற்கை வாழ்வியலில் சொல்வது போல, ஏதாவது ஒரு வகையானப் பயறை மட்டும் உபயோகியுங்கள்.
  • மாவில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, காய்கறிகளைப் பொடிதாக நறுக்கி எண்ணை இல்லாமல் வதக்கிப் போட்டும் தோசை வார்க்கலாம்.
  • அதுபோலவே, மாவில் தண்ணீரின் அளவைக் கூட்டி தோசையை மெல்லியதாகவும் அல்லது சற்றுக் கட்டியாக வைத்து ஊத்தாப்பம் போலவும் உங்கள் விருப்பத்தின் படி ஊற்றிக் கொள்ளலாம்.
  • மேலே கூறியுள்ளது போல், முழுக்க முழுக்க பாசிப்பயறை மட்டும் வைத்து முளைகட்டிப் பெசரட்டும் செய்து பார்த்துள்ளேன். அதுவும் நன்றாகவே வந்துள்ளது.

No comments :

Post a Comment